Tuesday, 28 October 2014

4500 அரசு மருத்துவர்கள் ராஜிநாமா



பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையிலேயே தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பது உட்பட, 14 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்கள், வரும், 27ம் தேதி ராஜினாமா செய்ய தீர்மானித்து உள்ளனர்.

ராஜினாமா : பெங்களூருவில், கர்நாடகா மாநில அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் வீரபத்ரய்யா கூறியதாவது:
கர்நாடகா முழுவதும், 4,500 அரசு டாக்டர்களும், 250 குத்தகை அடிப்படையிலான டாக்டர்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் வரும், 27ம் தேதி, காலை, ௧௧:௦௦ மணிக்கு பெங்களூரு ஆனந்தராவ் சர்க்கிளிலுள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கமிஷனரின் அலுவலகத்தின் எதிரில் கூடி, ராஜினாமா செய்ய உள்ளனர். பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளுக்கு, அரசே நேரடி பொறுப்பு. கடந்த, 2009, 2013ல், போராட்டம் நடத்தினோம். இதுவரை, எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முதல்வர் சித்தராமையாவை, நான்கு முறை சந்தித்தும், பலனில்லை. சுகாதார துறை அமைச்சரும் கவனம் செலுத்தவில்லை. மாவட்ட பஞ்சாயத்து எல்லையிலுள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கான ஊதியத்தை, நிதித்துறையிலிருந்து விடுவிக்க வேண்டும். பலமுறை சிபாரிசு செய்தும் அரசு கண்டுகொள்ளவில்லை.

டாக்டர் பற்றாக்குறை : மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில், 60 சதவீதம் அளவு சிறப்பு டாக்டர் பற்றாக்குறை உள்ளது. இதனால், அனைத்து சிகிச்சைகளையும் சாதாரண டாக்டர்களே வழங்குகின்றனர். தமிழகத்தை போன்று, இங்குள்ள சுகாதார துறையில் காலியாகவுள்ள பதவிகளை, ஒவ்வொரு, மூன்று மாதத்துக்கு ஒரு முறை நிரப்ப வேண்டும். குத்தகை அடிப்படையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, குறைந்தபட்சம் சம்பளம், 28 ஆயிரம் ரூபாய். அவர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். மூன்று ஆண்டு பணியாற்றியவர்களை நிரந்தரமாக்க வேண்டும்.

திருத்தம் : அதிகமான மருந்துகளை சப்ளை செய்ய வேண்டும். சில மருத்துவமனைகளில் நாய்க்கடி, பாம்புக்கடிகளுக்கு மருந்துகள் இல்லை. இடமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் காலகட்டத்தில், சரியான நேரத்துக்கு ஊதியம், இதர படி வழங்கப்பட வேண்டும். மருத்துவ வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும். மருத்துவ துறையை மாற்றி அமைக்க வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை முன் வைத்து, ராஜினாமா செய்ய, தீர்மானிக்கப்பட்டுள்ளது. எங்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டாலும் பின் வாங்கமாட்டோம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.