Thursday, 7 August 2014

தொகுபூதியத்தில் தொலைந்த வாழ்க்கை- எதிர்பார்ப்பில் மருத்துவதுறை மாநில கோரிக்கை
 

தொகுபூதியத்தில் தொலைந்த வாழ்க்கை

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லுரி மனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு மருத்துவதுறை சார்ந்த இடங்களில் செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வகநுட்புனர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என்று பல்வேறு பிரிவுகளை சார்ந்த ஊழியர்கள் ஐந்து ஆண்டுகள் பத்து ஆண்டுகள் என தொடர்ந்து ஆண்டுகணக்கில் தொகுபூகுபூதியத்தில் பணி புரிந்து வருகின்றனர்.

 

தொழிலாளர் நலச்சட்டங்கள்

நமது நாட்டில் தொழிலாளர் நலச்சட்டங்கள் என்பது ஏட்டளவில் உள்ளதே தவிர இதுவரை எதுவுமே நடைமுறையில் அமல்படுத்தபடவில்லை. தொகுப்பூதியம் என்பது எத்தனை ஆண்டுகாலம் என்பதை இதுவரை எந்த அரசாங்கமும் தெளிவாக வரன்முறை படுத்தபடவில்லை. 12 மணி நேரம் 24 மணி நேரம் என தொடர்ந்து எந்த தொழிலாளர் நலசட்ட விதிகளும் பின்பற்றபடாமல் தொகுப்பூதிய செவிலியர்கள் கிராமபுறங்களில் தொடர்ந்து பணி புரிந்து வருகிறார்கள். 240 நாட்கள் பணி புரிந்தாலே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்ட விதி, எட்டு சுரைக்காய் கறிக்கு உதாவது என்பதற்கு சிறந்த உதாரணம்.

 

விலைவாசி உயர்வும்-தொகுப்பூதியமும்

விலைவாசி உயர்வு என்ற காரணத்தால் TA, DA என்ற பெயரில் வருடாவருடம் 80000 ஆக இருக்கும் ஒரு அரசு ஊழியரின் ஊதியத்தை 100000 மாற்றி அறிவிக்கும் அரசு 8000 சம்பளமும் வாங்கும் ஊழியரும் அதே விலைவாசியின் மத்தியில் தான் வாழ்கிறார் என்பதை மறந்து விடுகிறது அல்லது மறுத்து விடுகிறது.

 

தொகுப்பூதியம் வெறுக்கபட காரணம்

பொதுவாக மருத்துவ துறையில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் தொகுப்பூதியம் மற்றும் காண்ட்ராக்ட் என்ற வார்த்தையை வெறுக்க காரணம், சமுதாயத்தில் மரியாதையை கிடையாது, ஊதியம் மாதமாதம் வழங்கபடாது, பணி நேர வரன்முறை கிடையாது, பணிக்கான உத்திரவாதம் கிடையாது, ட்ரான்ஸ்பர் மற்றும் டெபுடேசன் பண்ணி கொண்டே இருப்பார்கள், அதற்கான TA DA வழங்கமாட்டார்கள், முறையான விடுப்பு கிடையாது, அரசாங்க விடுப்பு கிடையாது, பேறுகால விடுப்பு கிடையாது, சகஊழியர்கள் மதிப்பது கிடையாது. நிரந்தர ஊழியருக்கு இருக்கும் அனுமதிக்கபட்ட ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு ஆறுவருடம் தொகுபூதியத்தில் பணி புரிந்த ஒரு தொகுப்பூதிய செவிலியருகே கிடையாது.

 

 

 

 

 

 

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
+2 முடித்துவிட்டு மெரிட் அடிப்படையில் மருத்துவ துறையில் டாக்டர், செவிலியர் போன்ற படிப்புகளை முடித்து விட்டு சேவை செய்ய போகிறோம் என்ற சந்தோசத்தில் வெளியே வரும் போது சமுதாயத்தில் நிலவும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள், தேவையான அளவு பணியாளர் எண்ணிக்கை இல்லாதது, தேவையான மருத்துவ வசதிகள் இல்லாதது, போதுமான ஊதியம் வழங்காதது, ஊதிய மாறுபாடுகள், முழுமையான சேவை செய்ய விடாமல் தடுக்கின்றன.


மருத்துவதுறையும் மனஉளைச்சலும்

ஒப்பந்த ஊழியர்களுக்கு மிகக்குறைந்த சம்பளம் தருவதும், எப்பொழுதும் நோயாளிகளோடு புழங்குவது, வேலைக்கு போதிய ஆட்களை நியமிக்காமல் புதிய புதிய துறைகளை உருவாக்குவதும், அளவுக்கு அதிகமான நோயாளிகளையும் வார்டுகளையும் செவிலியர்களை கவனிக்க சொல்வதையும், அதனால் ஏற்படும் கடுமையான பணிச்சுமையையும், அதனால் தாங்கள் கவனமுடன் பராமரிக்கும் நோயாளிகள் இறப்பது போன்றவற்றால் மன உளைச்சலுக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவதுறை ஊழியர்கள் உள்ளாகிறார்கள்


இலவசங்கள்:

குடிக்க தண்ணீர் இல்லாத பொழுது கொப்பளிக்க பன்னிர் எதற்கு என்பது போல் பொதுவாக நமது நாட்டில் மக்கள் அரசாங்கள் இலவசமாக எதாவது கொடுத்தால் முட்டி மோதி வாங்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் இந்த இலவசங்களுக்கு செலவழிக்கபடும் நிதியை கொண்டு தரமான இலவச கல்வி, தரமான மருத்துவம் சேவை, மற்றும் பல அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும் என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள்,.

 

 

மனிதவளம்

இப்போதும் பல மருத்துவமனைகளில் மக்கள் நெருக்கத்தால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் சரியான படுக்கை வசதி இன்றி தரையிலும், கொசுக்கடியில், ஓடாத ஒரு பேனுக்கு  அடியில் படுத்து கொண்டு எத்தனையோ நோயாளிகள் சிரமபடுகின்றனர்.

 

பெருமைக்கு எருமை ஓட்டுவது என்பார்கள் அதுபோல தமிழகத்தில் NABH மருத்துவமனை என்ற தேசிய தரசான்றிதலை பல அரசு மருத்துவமனைகளில் முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன. இது உண்மையில் ஒரு பார்வையில் பாராட்டபடவேண்டிய விஷயம்,

 

ஆனால் நோயாளிககளை கவனிக்க போதுமான அளவில் செவிலியர்களை நியமிக்காமல் எவ்வாறு NABH முயற்சி நிறைவு அடையும் என்பது புரியவில்லை.

 

60 நோயாளி உள்ள ஒரு வார்டில் ஒரு செவிலியரை போட்டு 16 பக்கம் கொண்ட NABH கேஸ் சீட் தந்து அதை நிரப்ப சொன்னால் 60 நோயாளிகளுக்கு NABH தரத்திற்கு நிரப்பவே நேரம் சரியாக இருக்கும். உயர்அதிகாரிளுக்கு பயந்து கொண்டு நோயாளிகளை கவனிப்பதை விட இந்த எழுத்துவேலைகளை திறம்பட செய்யவே நேரம் சரியாக இருக்கிறது செவிலியர்களுக்கு. ஏனெனில் கேள்வி கேட்பவர்கள் கேர் கொடுதிர்களா என்று கேட்பது இல்லை கேஸ்சீட்டில் எழுதினீர்களா என்றுதான் கேட்கிறார்கள்.

 
எழு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் உள்ள அரசு செவிலியர்களின் எண்ணிக்கை வெறும் 18000 மட்டுமே. அதிலும் நான்காயிரதிற்கு மேற்பட்டோர் தொகுபூதியத்தில் பணி புரிவோர்.

 

விதிப்படியா இல்லை நோயாளியின் விதிப்படியா

அரசு மருத்துவமனைக்கு வரும் ஒரு நோயாளிக்கு கிடைக்கும் சேவை விதிப்படி கிடைக்கிறதா இல்லை அந்த நோயாளியின் விதிப்படி கிடைக்கிறதா என்ற குழப்பம் எனக்கு உண்டு ஏனெனில் எந்த NABH மருத்துவமனையில் NABH விதிப்படி ஆறு படுக்கைக்கு ஒரு செவிலியர் இருக்கிறார் ? எந்த மருத்துவகல்லுரி மருத்துவமனையில் இந்திய மருத்துவகவுன்சில் விதிப்படி செவிலியர்கள் நியமிக்கபட்டு இருக்கிறார்கள் ? எனவே பெயரளவில் பேப்பரில் மட்டும் இல்லாமல் உண்மையில் ஒவ்வொரு நோயாளியும் சரியான சிகிச்சை பேர அடிப்படையான தேவைகளை  பூர்த்தி செய்ய வேண்டும்.

 

மாறவேண்டும் மனநிலை

முதலில் அரசாங்கமும், நிதி துறையும் , மருத்துவமனைக்கு, மருத்துவ  சேவைக்கும், மருத்துவ துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் முதலிடம் கொடுக்க முன் வரவேண்டும்,

மருத்துவத்துறை என்றாலே வருமானம் இல்லாமல், வரும் வருமானமும் வீணாக விரயமாககூடிய துறை என்ற நிதிதுறையின் பார்வை மாறவேண்டும். அதில் பணி புரியும் ஊழியர்களுக்கு கொடுக்கபடும் ஊதியம், ஊதியம் என்று எண்ணாமல் மக்களுக்கு நேரிடையாக செய்யும் சேவைக்கு தரப்படும் நியாமான சன்மானம் என்று என்ன வேண்டும்.

 

 

 


அரசு மருத்துவ மனைகளுக்கென மிக தெளிவான வரைமுறைகள் வகுத்து கட்டிடங்கள் முதல் காலி பணி இடங்கள் வரை அனைத்திற்கும் தனிகவனம் செலுத்தி குறைகள் முதல் கூரைகளை வரை அனைத்தயும் நிவர்த்தி செய்து அரசு மருத்துவ மனைகள் நடத்த படவேண்டும்.


முறையான அங்கீகாரம்
மருத்துவ துறை ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் இந்த புனிதமான சேவைக்கு தக்க அங்கிகாரம் கொடுப்பதோடு அவுட்சோர்சிங், காண்ட்ராக் போன்ற வார்த்தைகளை இந்த துறை அகராதியில் இருந்தே நீக்கி நிரந்தர பணி மற்றும் நிறைவான ஊதியம் வழங்கி இந்த துறையில் பணி புரிவதே பெருமையாக கருதும் சூழலை நமது அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம்
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாடு நமது நாட்டில் ஏற்பட்டால்தான் தொழிலார்கள் அனைவரும் முழு மனோதோடு பணி புரிய முடியும்.

மருத்துவமனை என்றால் அது அரசு மருத்துவமனை

மேலைநாடுகள் போன்று மருத்துவ துறைக்கு அதிக நிதியை ஒதிக்கி தனியாரை நாடி செல்லும் நிலை மாறி மருத்துவமனை என்றாலே அது அரசாங்க மருத்துவ மனை தான் என்று சொல்லும் அளவுக்கு இந்த துறையை எடுத்து செல்லவேண்டும் அவ்வாறு செய்தாலே அந்த அரசாங்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. 

மருத்துவ துறைக்கு செலவழிக்கும் நிதி நாட்டின் முன்னேற்றத்திற்கு செலவழிக்கும் நிதி என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு வர வேண்டும்.


இதுபோன்ற அடிப்படை விசங்களை சரி செய்து மருத்துவதுறையையில் தமிழகத்தை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக மாற்ற வேண்டும்,

இப்படிக்கு

தங்கள் அன்புடன்

ரவி சீத்தாராமன்

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.